சென்னையில் 180 இடங்களில் தானியங்கி மின்னணு கழிப்பறைகள் அமைக் கப்பட்டுள்ளன. அதன் அமைவிடங்கள் மற்றும் வசதிகள் குறித்து தெரிந்துகொள்ளும் கைபேசி செயலியை மேயர் சைதை துரைசாமி நேற்று வெளியிட்டார்.
நவீன வசதிகளுடன் கூடிய மின்னணு கழிவறையை கேரள மாநிலத்தை சேர்ந்த ஏரம் சயின்டிஃபிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த வகையை சேர்ந்த 180 மின்னணு கழிவறைகள் சென்னை மாநகராட்சியில் 91 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த இடங்களில் இந்த கழிவறைகள் உள்ளன என்று கைபேசி மூலமாக தெரிந்துகொள்வதற்கான செயலி (App) வெளியீட்டு விழா, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. செயலியை மேயர் சைதை துரைசாமி வெளியிட்டார். மாநகராட்சி ஆணையர் பி.சந்திரமோகன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆர்.கண்ணன், துணை மேயர் பா.பெஞ்சமின், ஏரம் சயின்டிஃபிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.அன்வர் சதத் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக கே.அன்வர் சதத் கூறும்போது, ‘‘ஏரம் சயின்டிஃபிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சார்பில் 19 மாநிலங்களில் 1,600 மின்னணு கழிவறைகள் அமைத்திருக்கிறோம். 180 மின்னணு கழிவறைகளுடன் சென்னை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் நாணயங்களை செலுத்தி பயன்படுத்த வேண்டும். இங்கு இலவசமாக பயன்படுத்த அரசு அனுமதித்துள்ளது. ஒரு கழிவறை அமைக்க ரூ.4.8 லட்சம் செலவாகிறது. 24 மணி நேரமும் அங்கு தூய்மை உறுதி செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது’’ என்றார்.
புதிய கைபேசி செயலியின் செயல்பாடு குறித்து கேட்டபோது அந்நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொது மேலாளர் எஸ்.நாராயணசுவாமி கூறியதாவது:
ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்த செயலி செயல்படும். கூகுல் பிளேஸ்டோரில் Chennai e-Toilet என தட்டச்சு செய்து, செயலியை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். மின்னணு கழிவறைகள் அமைந்திருக்கும் இடங்களின் முகவரி, கழிவறைகளின் தன்மை (ஆண், பெண், மாற்றுத் திறனாளி), கழிவறையை பயன்படுத்தியோர் எண்ணிக்கை, நீர் இருப்பு போன்றவற்றை அதில் தெரிந்துகொள்ளலாம். அதற்காக இந்த கழிவறைகளில் ஜிபிஆர்எஸ், ஜிபிஎஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நமது இருப்பிடத்துக்கு அருகே எங்கு இந்த வகை கழிவறை இருக்கிறது என்றும் அறியலாம். கழிவறைகளின் நிலையை மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்துகொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்ட்ராய்டு 6-ல் சிக்கல்
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் நாம் இருக்கும் இடம், அருகில் உள்ள கழிவறைகளை ஆண்ட்ராய்டு வெர்ஷன் 6-ல் பார்க்கமுடியவில்லை. இதுகுறித்து ஏரம் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆண்ட்ராய்டின் முந்தைய வெர்ஷனுக்கு ஏற்ப இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் வெர்ஷன் 6-ல் செயல்படும்போது குறைபாடுகள் வர வாய்ப்பு உள்ளது. அது உடனடியாக சரிசெய்யப்படும்’’ என்றனர்.