சென்னையில் பெருமழை பெய்தாலும், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரிசர்வ் வங்கி எதிரில் உள்ள சுரங்கப்பாதையை, சீரமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மணலி புதுநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சனிக்கிழமை சென்றார். அப்போது இந்த சுரங்கப்பாதையில் செடிகள் முளைத்திருப்பதை பார்த்தார். பின்னர், சென்னை மாநகராட்சி ஆணையருடன் நேரில் ஆய்வு செய்து, பாலத்தை சீரமைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியுடன் இன்று ஆய்வு செய்தோம்.
இச்சுரங்கப்பாதையின் உறுதித் தன்மை வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும் மழை காலத்தில் இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க அமைக்கப்பட்டுள்ள 1.20 லட்சம் கொள்திறன் கொண்ட கிணற்றையும் ஆய்வு செய்தோம். இந்த சுரங்கப்பாதையை சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சீரமைத்து, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் பாலத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும்.
இதற்கு முன்பு மழைக்காலங்களில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப் பாலம் உடனடியாக மூடப்படும். ஒரு வாரம் கழித்துதான் நிலைமை சீராகும். சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப் பாலங்களும் பெருமழையின்போது நிச்சயம் பாதிக்கப்படும். போக்குவரத்தும் துண்டிக்கப்படும். இப்போது அந்த அளவுக்கு மழைநீர் தேங்கவில்லை. அடுத்து வரும் மழை காலங்களில் சுரங்கப் பாலங்களில் வெள்ளநீர் தேங்காத அளவுக்கு வரைவு திட்டத்தை உருவாக்கி மாநகராட்சி செயல்படுத்தும். வரும் காலங்களில் மாநகரப் பகுதியில் நிலவும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.
எங்களை விட சென்னையை நன்றாக அறிந்தவர் முதல்வர். நிதிச்சுமை ஒருபுறம் இருந்தாலும், சென்னை மாநகரம் தமிழகத்தின் தலைநகரம் என்பதால் சிறந்த முறையில் நிர்வகிக்க நிதியை பற்றி கவலைப் படாமல், தனது அறிவுத் திறனால் சென்னையை நிச்சயம் முதல்வர் பொலிவுற செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.