தமிழகம்

ஆதரவற்ற குழந்தைகளின் சந்தோஷத்தில் மன நிறைவு: மதுரை ‘வா நண்பா’ இளைஞர்கள் நெகிழ்ச்சி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கைநிறைய சம்பாதிக்கும் இளைஞர்கள் 4 பேர் வார இறுதியில் ஒன்று சேர்ந்தாலே தியேட்டர்கள், ஹோட்டல்களுக்குச் செல்வர். நண்பர்களுடன் ஷாப்பிங் மால்களுக்கு சென்று ஊர் சுற்றுவர் என்ற எண்ணம்தான் பரவலாக உள்ளது. இந்த எண்ணத்தை மாற்றிக் காட்டி உள்ளனர் மதுரை செல்லூரைச் சேர்ந்த சரவணன், காளி, சுந்தர், ரகுமான் ஆகிய 4 இளைஞர்கள். இப்போது, இவர்களுக்குப் பின்னால் 400 இளைஞர்கள் திரண்டு நிற்கிறார்கள்.

வாரத்தில் 6 நாட்கள் குடும்பத்துக்காகச் செலவிடும் இவர்கள், 7-வது நாளை, அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று மட்டும் சமூக சேவைக்கு ஒதுக்கி விடுகிறார்கள். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு தெருவில், சாலைகளில் தேங்கிக் கிடக்கும் குப்பையை அகற்றி சுத்தம் செய்கிறார்கள்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து, உணர்வுப்பூர்வமான சமுதாயப் பணியை செய்துள்ளனர். மதுரை சட்டக் கல்லூரி எதிரே இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் முடங்கிக் கிடந்த குழந்தைகளை, மதுரையிலேயே பெரிய ஷாப்பிங் மாலான விஷால் மாலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஒவ்வொரு கடையாகச் சுற்றிக்காட்டி, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, அந்தக் குழுவைச் சேர்ந்த சரவணனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

நானும் எனது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து, சாதாரணமாக சில உதவிகளை பிறருக்குச் செய்யத் தொடங்கினோம். தற்போது, அது ‘வா நண்பா’ என்ற மிகப்பெரிய சமுதாயக் குழுவாக உருவாகி உள்ளது. சாலைகளில், பொது இடங்களில் குப்பை தேங்கிக் கிடந்தால், கூச்சமின்றி இறங்கி சுத்தம் செய்கிறோம். எங்களைப் பார்த்து புதுப் புது நண்பர்கள் எங்களுடன் இணைகின்றனர். இப்படி 50 பேர் 100 பேராகி இன்று 400 பேராக இணைந்துள்ளோம்.

மதுரையை மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக மாற்றுவதே எங்கள் இலக்கு. எல்லோருக்குமே சமூகத்தில் ஏதாவது நல்லது செய்ய ஆசை இருக்கும். தனி நபராகச் செய்ய கூச்சப்படுவர். அதுவே, குழுவாகச் செய்யும்போது ஆர்வமாக செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த வாரம் (நேற்று) ஆதரவற்ற குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து அந்தக் குழந்தைகளிடம், அவர்களின் ஆசையைக் கேட்டோம். அவர்களோ, ‘எல்லோரும் எங்களுக்கு சாப்பாடு தருகிறார்கள். துணி, பென்சில், பேனா, நோட்டு, வாங்கித் தருகிறார்கள். மதுரையில் நாயக்கர் மகால், காந்தி அருங்காட்சியகம், அழகர்கோவிலை பார்த்துவிட்டோம். எங்களை, படிக்கட்டுகள் எல்லாம் மேலே போகுமே (எஸ்கலேட்டர்), அந்த விஷால் மாலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா’ என்றார்கள்.

அவர்கள் ஆசைப்படியே, விஷால் மாலுக்கு அழைத்துச் சென்றோம். உள்ளே சென்றதும், மாலின் மையப் பகுதியில் நின்று வானளாவிய கட்டிடங்களை பார்த்து பிரமித்தார்கள். நகரும் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி குதூகலமடைந்தனர். அப்போது, அவர்கள் முகத்தில் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அங்குள்ள எலக்ட்ரானிக்ஸ் உள் விளையாட்டு அரங்குக்கு அழைத்துச் சென்றோம். அவர்களுக்குப் பிடித்த ஒவ்வொரு விளையாட்டின் முன் அமர்ந்து விளையாடினர். ஒவ்வொரு விளையாட்டும் 60 ரூபாய், 100 ரூபாய், 150 ரூபாய் கொடுத்துதான் விளையாட வேண்டும். பைக் ரேஸ், கார் ரேஸ், ஸ்னோ பவுலிங் என அவர்களுடைய கனவு விளையாட்டை ஆசைப்படி விளையாட விட்டோம்.

அதன்பின், அங்குள்ள உண வகத்தில் சாப்பிட வைத்தோம். அவர்கள் எங்களிடம், இதுமாதிரி யாரும் எங்கேயும் அழைத்துச் சென்றதில்லை எனச் சொன்னபோது அவர்கள் சந்தோஷத்தில் எங்களுக்கு மனநிறைவு ஏற்பட்டது என்றார்.

ஆசையைக் கேட்டு நிறைவேற்றுங்கள்

சரணவன் மேலும் கூறும்போது, ‘‘ஆதரவற்ற இல்லக் குழந்தைகளுக்கு நிறைய தன்னார்வலர்கள் உதவி செய்கின்றனர். அந்த உதவியை வெறும் உணவாகவும், பொருளாகவும், கிடைத்த விஷயத்தை மீண்டும், மீண்டும் வாங்கிக் கொடுக்காமல் அவர்கள் ஆசை என்னவென்று கேட்டு தெரிந்து, அதை நிறைவேற்றினால், இன்னும் அதிகமாக சந்தோஷப்படுவார்கள். அது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து அவர்கள் முன்னேற்றத்துக்கும், கல்விக்கும் உதவியாக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT