தங்க நகைகளுக்கு விதிக்கப்பட் டுள்ள கலால் வரியை ரத்து செய்ய கோரி இன்று முதல் நாளை மறுநாள் வரை (3 நாட்களுக்கு) நாடுமுழுவதும் நகை கடை உரிமை யாளர்கள் கடையடைப்பு போராட் டம் நடத்தவுள்ளனர். இதனால், தினமும் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிக்கும் என நகை கடை உரிமை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் முதல் முறையாக தங்க நகைகளுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நகை உற்பத்தியாளர்கள் கூடுதல் செலவை காட்டி, பவுனுக்கு ரூ.300 என விலை உயர்த்தப்படவுள்ளது. இதேபோல், ரூ.2 லட்சத்திற்கும் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரூ.2 லட்சம் மேல் நகை வாங்குவோர் ரூ.2 ஆயிரம் கூடுதல் செலவாகும். இந்த அறிவிப்பு நகை வாங்குவோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து நகை கடை உரிமையாளர்கள் இன்று முதல் நாளை மறுநாள் வரையில் கடையடைப்பு போராட்டம் நடத்த வுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘தங்க நகைகளுக்கு முதல் முறையாக ஒரு சதவீதம் கலால்வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2 லட்சம் மேல் நகை வாங்குவோருக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.2 லட்சத்துக்கும் மேல் நகை வாங்கினால், பான் அட்டையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவினால், நாங்கள் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறோம். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று முதல் நாளை மறுநாள் வரையில் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளோம். இதனால், தினமும் சுமார் ரூ.900 கோடி வர்த்தகம் பாதிக்கும்’’ என்றார்.