தமிழகம்

சென்னையில் குறைந்த நேரமே கிரகணம் தெரிந்தது

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் சூரியக் கிரகணத்தைப் பார்ப்பதற்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைப் பார்ப்பதற்காக காலை 6 மணிக்கெல்லாம் பெருவாரியான பொதுமக்களும் பள்ளிக் குழந்தைகளும் கூடிவிட்டனர். அனைவரும் பார்க்கும் வகையில் இதற்கென தயாரிக்கப் பட்ட சிறப்புக் கண்ணாடிகளும் தரப்பட்டன. இதற்கிடையில், மேக கூட்டங்களால் சென்னையில் சூரியக் கிரகணத்தை சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது.

இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் டாக்டர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:

இந்தோனேஷியா மற்றும் பசிபிக் கடலோரப் பகுதிகளில் முழு சூரியக் கிரகணமும், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்தியாவின் சில பகுதிகளிலும் பகுதி சூரியக் கிரகணமும் தெரியும் வாய்ப்பு இருந்தது. ஆனால், சென்னையைப் பொறுத்த வரை குறைந்த நேரமே பகுதி சூரியக் கிரகணம் தெரிந்தது. காலை 6.20 முதல் 6.48 வரை தெரிய வேண்டிய கிரகணம், காலை 6.25 முதல் 6.30 வரை 5 நிமிடம் மட்டுமே தெரிந் தது. மேக கூட்டங்கள் வந்ததன் காரணமாக நம்மால் பகுதி சூரியக் கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

இந்த சூரியக் கிரகணத்தின் மூலமாக நாம் பல தகவல்களை தெரிந்துகொள்ளலாம். பல ஆராய்ச்சிகள் இந்த சூரியக் கிரகண நேரத்தில்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கிரகண நேரத்தின்போதுதான் சூரியனில் என்ன விதமான மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை கண்டறிய முடியும். ஹீலியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கவும், ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை நிரூபிக்கவும் இந்த சூரியக் கிரகணம்தான் உதவியாக இருந்தது. பல பருவ மாற்ற நிலைகளை அறிந்துகொள்வதற்கும், சூரியனில் இருக்கக் கூடிய கரும்புள்ளிகளைப் பற்றி ஆராய்வதற்கும் இது நல்ல தருணமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சூரிய கிரகணத்தால் பகலிலேயே இருளில் மூழ்கியது இந்தோனேசியா: இந்தியாவின் சில இடங்களில் பகுதி அளவில் காண முடிந்தது

சூரிய கிரகணம் காரணமாக இந்தோனேசியா நேற்று பகலி லேயே இருளில் மூழ்கியது. எனினும் இந்தியாவின் சில பகுதிகளில் சூரிய கிரகணத்தை பகுதி அளவில் காண முடிந்தது.

நேற்று காலை 6.19 மணிக்கு பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நகரத் தொடங்கியது. அடுத்த ஒரு மணி நேரத்தில், சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்துக் கொண்டது. இந்த முழு சூரிய கிரகணத்தை இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள டெர்னேட் தீவில் காண முடிந்தது.

இதனால் நாடு முழுவதும் பகலிலேயே இருள் சூழ்ந்தது. சூரிய கிரகணத்தை பொது மக்களும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வெறும் கண் களாலேயே கண்டுகளித்தனர்.

இதுபோல, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியா வின் சில பகுதிகள், ஆஸ்தி ரேலியாவிலும் சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை சில பகுதிகளில் பகுதி அளவில் சூரிய கிரகணம் தென்பட்டது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று காலை 5.51 மணி முதல் 6.06 வரை கிரகணம் ஏற்பட்டது.

இதுகுறித்து கொல்கத் தாவில் உள்ள எம்.பி.பிர்லா கோளரங்க இயக்குநர் டாக்டர் தேவிபிரசாத் கூறும்போது, “இந்தியாவின் கிழக்குப் பகுதி களில் பகுதி அளவு சூரிய கிரகணம் தென்பட்டது. அதிக பட்சமாக கன்னியாகுமரியில் சூரியன் 66 சதவீதம் சந்திரனால் மறைக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் கிரகணம் தென்பட்டது. திரிபுரா, அசாம் மற்றும் மேற்குவங்கத்தின் வடக்கு பகுதிகளில் மேகம் சூரியனை மறைத்ததால் கிரகணத்தைக் காண முடிய வில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT