தமிழகம்

சர்வதேச ஃபேஷன் ஷோவில் பங்கேற்கும் 6 வயது கோவை சிறுவன்: 3 வயதிலிருந்து 15 பதக்கங்கள் குவிப்பு

ஏஎன்ஐ

சர்வதேச ஃபேஷன் ஷோவில் பங்கேற்பதற்காக கோவையைச் சேர்ந்த 6 வயதுச் சிறுவன் ராணா சிவக்குமார் நாளை துபாய் செல்கிறார். தனது 3 வயதிலிருந்து இதுவரை பல்வேறு போட்டிகளில் வென்று ஏராளமான விருதுகள், பதக்கங்களைக் குவித்துள்ளார்.

துபாயில் நாளை (நவ.22) தொடங்கும் சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்க ராணா சிவக்குமார் தேர்வாகியுள்ளார். இவ்வாறு சர்வதேசப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்நாட்டின் முதல் சிறுவன் ராணா சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை ராம் நகரைச் சேர்ந்த இச்சிறுவனின் தந்தை சிவக்குமார் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். தாய் கோமதி அழகு நிலைய உரிமையாளர். ராணாவின் தந்தை சிவக்குமார், ராம்ப் வாக்கில் நடப்பதற்கான சில அடிப்படை மாடலிங் திறன்களைக் கற்றுக் கொடுத்துள்ளார்.

தாய், தந்தையருடன் ஏஎன்ஐக்குப் பேட்டியளித்த ராணா சிவக்குமார்

இதுகுறித்து ராணாவின் வடிமைப்பாளர் கூறுகையில், ''ராணாவுக்கு 3 வயதிலேயே நல்ல போட்டோஜெனிக் தோற்றம். அப்போது அவரது தயார் நடத்திவரும் அழகு நிலையத்துக்கு ஒருமுறை சென்றிருந்தபோது இதைக் கவனித்த நான், ராணாவை மாடலிங் துறையில் முயற்சி செய்யுமாறு பெற்றோரை வற்புறுத்தினேன். சர்வதேச அளவில் ஒரு ரவுடி மாடல் பிரிவில் ரைசிங் ஸ்டாராக வளர்ந்து நிற்கிறான் இச்சிறுவன்'' என்றார்.

ராணா சிவக்குமார் பெற்ற விருதுகள், பதக்கங்கள்

இதுகுறித்து கோவையில் உள்ள அழகு நிலைய உரிமையாளரான குழந்தையின் தாய் கோமதி கூறுகையில், ''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஃபேஷன் முகவர் ஒருவர் என் பியூட்டி சலூனுக்கு வந்தார். அவர் என் குழந்தை கவர்ச்சியாக இருப்பதாகக் கூறினார். ராணாவை கோயம்புத்தூரில் நடக்கும் ஃபேஷன் வாக் ஒன்றில் பங்கேற்க அழைத்தபோது, ஆரம்பத்தில் நாங்கள் தயங்கினோம். ஆனால், இப்போது எங்கள் மகனைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்.

ராணா இதுவரை 15 விருதுகளும், பதக்கங்களும் பெற்றுள்ளார். சமீபத்தில் கோவாவில் நடந்த ஃபேஷன் ஷோவிலும் கலந்துகொண்டு விருதை வென்றார். சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோக்களின் ராம்ப் வாக் மேடையில் நடக்கும்போது உடல் மொழியே அவரது தன்னம்பிக்கையை பிரதிபலிக்கிறது'' என்று தெரிவித்தார்.

துபாயில், நாளை முதல் 26 வரை ஐந்து நாட்கள் நடைபெறும் சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவில் 15 நாடுகள் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இப்போட்டியில் பங்கேற்பது குறித்து ராணா கூறுகையில், ''மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 14 விருதுகள் மற்றும் ஒரு பதக்கத்தை வென்றுள்ளேன். எதிர்காலத்தில் கடற்படை அதிகாரியாக ஆக விருப்பம் உள்ளது'' என்றார்.

SCROLL FOR NEXT