தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: வெள்ள நிவாரணம், தொழில்துறை முதலீடு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதம்

செய்திப்பிரிவு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ள நிவாரணம், தொழில்துறை முதலீடுகளுக்கான அனுமதிமற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழைபெய்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக முடிவெடுக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

கனமழை பாதிப்பு காரணமாக தேதி மாற்றப்பட்டு, 20-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை 7 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகஅமைச்சரவைக் கூட்டம், நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வதுதளத்தில் உள்ள கூட்ட அரங்கில்நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, நிதித் துறை செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் ச.கிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, வணிகவரி, பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர். இரவு 8.20 மணி வரை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இன்று தமிழகத்துக்கு மத்தியக் குழு வரஉள்ள நிலையில், வெள்ளசேதம் குறித்து அவர்களிடம் அளிக்க வேண்டிய தகவல்கள், பொதுமக்கள் உயிரிழப்பு, வெள்ள நிவாரணம் வழங்குதல், நிதி நிலைமை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

முக்கிய முடிவுகள்

இதுதவிர, வெள்ள மீட்பு பணிகள், நிவாரண உதவிகள், தமிழகத்தில் தொழில் தொடங்கஉள்ள நிிறுவனங்களுக்கான அனுமதி, நிதி மையத்தை சென்னையில் உருவாக்கி, வெளிநாட்டு நிதி முதலீடுகளை பெறுதல், வணிகவரி, பத்திரப் பதிவுதுறையில் வருவாயை பெருக்குவது, உள்ளாட்சித் தேர்தலில் மேயருக்கான மறைமுக தேர்தலை நேரடி தேர்தலாக நடத்துதல்உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT