தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான வயல்களில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலையில், பாரம்பரிய நெல் ரகங்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயலில் பல நாட்களாக தண்ணீர்தேங்கி நிற்பதால் இளம் நெற்பயிர்களின் வேர்கள் அழுகத் தொடங்கிஉள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தற்போது, மழைநீர் வடிந்த இடங்களில் விவசாயிகள் யூரியா உரம் தெளித்து பயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், அதேசமயம், பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள்வயல்களில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாத நிலையிலும் நெற்பயிர்கள் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் நன்கு வளர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீ.முருகன், தனது 3 ஏக்கர் வயலில் பாரம்பரியநெல் ரகங்களான கருங்குருவை, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, மடுமுழுங்கி ஆகிய நெல் ரகங்களையும், கத்தரி, கொத்தவரை,அகத்தி, புதினா, பொன்னாங்கண்ணி கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, மஞ்சள், வாழை என 20 வகையான தோட்டப் பயிர்களையும் சாகுபடி செய்துள்ளார். இவற்றுக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
தற்போது பெய்து வரும் கனமழையில் பாரம்பரிய நெல் ரகங்கள் நடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியிருந்தாலும், இந்த நெற்பயிர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பச்சை பசேலென நன்கு வளர்ந்துள்ளன. பலநாட்கள் வயலில் மழைநீர் தேங்கிய நிலையிலும், நெற்பயிர்களின் வேர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து இயற்கை விவசாயி வீ.முருகன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலத்தில் வயல்களில் மழைநீர் தேங்குவதும், நெற்பயிர்கள் கீழே சாய்ந்து சேதமடைவதும், இதனால், விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதும் வழக்கமாக உள்ளது.
தற்போது அதிக மகசூல் பெற வேண்டும் என்பதால் விவசாயிகள் குறுகிய காலத்தில் 90 நாட்களில் விளையக்கூடிய புதிய புதிய நெல் ரகங்களை பயிரிட்டு, அதற்கு ரசாயன உரங்களை இடுவதால் நெற்பயிர்கள் தெம்பு இல்லாமல் உள்ளன.
ஆனால், பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்தும் 140 முதல் 170 நாட்கள் என நீண்டகால பயிர்களாக உள்ளன. இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் என இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்யும்போது, பாரம்பரிய நெல் ரகங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது. தற்போது வயல்களில் நெற்பயிரை சுற்றி மழைநீர் சூழ்ந்திருந்தாலும், எவ்வித பாதிப்பும் இன்றி இந்தநெற்பயிர்கள் வளர்ந்து வருகின்றன. அறுவடை சமயத்தில் தண்ணீர் தேங்கினாலும், எத்தனைநாட்கள் ஆனாலும் நெல்மணிகள் முளைவிடாது. ஏனென்றால், இந்தரகங்களை பக்குவப்படுத்தி விதைத்தால்தான் அவை முளைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் தொடர்மழையால் தாங்கள் விளைவித்த பயிர்கள் பாதிப்புக்கு உள்ளாகும்போது, கவலைப்படும் விவசாயிகள், பாதிப்புக்கு உள்ளாகும் பயிர்களுக்கு அரசு வழங்கும் இழப்பீடு, பயிர்க் காப்பீடு போதாது என புலம்பும் நிலையும் உள்ளது. எனவே, விவசாயிகள், மாற்று ஏற்பாடாக, பருவமழையை எதிர்கொண்டு, பாதிப்புகளை ஏற்படுத்தாத பாரம்பரிய நெல் ரகங்களை அதிகளவில் தங்கள் வயல்களில் சாகுபடி செய்ய முன்வர வேண்டும்” என்றார்.