தமிழகம்

தூத்துக்குடியில் அரசு மருத்துவரை கடத்தி தாக்குதல் வழக்கில் ஓட்டப்பிடாரம் ஒன்றிய திமுக செயலாளர் கைது

செய்திப்பிரிவு

அரசு மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, திமுக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பத்மநாபன் மகன் முருகப்பெருமாள் (25). இவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பல் மருத்துவராக பணிபுரிகிறார்.

கடந்த 18-ம் தேதி பணியை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, ஒரு காரில் வந்த 3 பேர் இவரை கடத்திச் சென்றனர். ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் அடைத்து வைத்து முருகப்பெருமாளை அவர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், மீண்டும் காரில் அழைத்துவந்து மருத்துவமனை அருகே இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

காயமடைந்த மருத்துவர் முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் விசாரணை நடத்தினர். மருத்துவரை கடத்திச் சென்று தாக்கியதாக, ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவரும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளருமான இளையராஜாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். கடத்தலுக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT