படப்பை அருகே கரசாங்கலில், நேற்று நடைபெற்ற 68-வது அனைத்திந்திய கூட்டுறவு மாநில அளவிலான வார விழாவில் பங்கேற்ற, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு, கேடயங்களை வழங்கினர். 
தமிழகம்

சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி நகைக் கடன் தள்ளுபடி விரைவில் வழங்கப்படும்: கூட்டுறவுத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் நகைக் கடன் தள்ளுபடி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், எவ்வித முறைகேடும் இன்றி வீட்டுக்கே தேடிச் சென்று வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை வார விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

படப்பை அருகே கரசாங்கலில், 68-வது அனைத்திந்திய கூட்டுறவு மாநில அளவிலான வார விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர், கேடயங்களை வழங்கினர்.

அப்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் கடன், விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி குறித்த பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விரைவில் எவ்வித முறைகேடும் இன்றி கடன் பெற்றவர்களுக்கு வீடு தேடி கூட்டுறவுச் சங்கங்கள் சார்பில் ஒப்படைக்கப்படும்.

நடப்பாண்டில் பயிர்க்கடன் ரூ.11,500 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 07.11.2021 வரை 5,59,873 விவசாயிகளுக்கு ரூ.3,853.97 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக சேர்க்கப்பட்ட 87,377 உறுப்பினர்களுக்கு ரூ.510.98 கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா உட்பட 10 மாவட்டங்களில் ரூ.120 கோடி அளவில் விவசாயிகளுக்கான பயிர்க் கடன்கள், கடந்த ஆண்டைக் காட்டிலும்அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விவசாயத்துக்கு மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி வரும் காலங்களில் கால்நடை வளர்ப்புக்கும் கடன்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குநர் கோ.க.மாதவன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ. சண்முக சுந்தரம், காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் எஸ். லட்சுமி மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT