சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாள வில்லை காட்சிக் கருவியில் (Token Display Unit) ஆவணதாரர் பெயரையும் காட்சிப்படுத்தப்படும் முறை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தத் துறையின் செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''2020- 21ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் மானியக் கோரிக்கையின்போது வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்தப்பட்டுள்ள காட்சிக் கருவியில் அடையாளவில்லை எண்ணோடு ஆவணதாரர்களின் பெயரும் காட்சிப்படுத்தப்படும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட காட்சிக் கருவிகளை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பொருத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய நடைமுறையால் பதிவின்போது ஆவணதாரர்களின் வரிசைக் கிரம எண்ணோடு அவர்களின் பெயரும் அறிவிக்கப்படும்.
இதன் மூலம் சரியான முன்னுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன் பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்பட்டு, பதிவு பொதுமக்களுக்கு வெளிப்படையான, குழப்பமற்ற வரிசைக் கிரமத்தைக் கடைப்பிடிக்கவும் ஏதுவாகும்''.
இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.