பெண்ணின் கழுத்தில் குத்தியிருந்த 7.50 செ.மீ. நீளமான தையல் ஊசியைப் பாதுகாப்பாக அகற்றி அவரின் உயிரை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
கோவை, தியாகராய நகரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், தற்கொலைக்கு முயற்சி செய்து, கழுத்து அறுபட்ட நிலையில் கடந்த நவம்பர் 2-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கழுத்தில் வெளிப்புறக் காயங்கள் இருந்ததால், முதலுதவி செய்தனர். தொடர்ந்து வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு, சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதில், கழுத்து தண்டுவடப் பகுதியில், மூளைக்குச் செல்லும் முக்கியமான ரத்தக்குழாய் அருகில் 7.50 செ.மீ. நீளமுள்ள தையல் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூளை, தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் இணைந்து ஆலோசித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
நவீன சி-ஆர்ம் எக்ஸ்ரே கருவியின் மூலம் ஊசி இருக்குமிடத்தை உறுதி செய்து, அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக ஊசி வெளியே எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, "ஊசி குத்தியது குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டபோது, தானே அந்த ஊசியைக் கழுத்தில் குத்தியதாக ஒப்புக்கொண்டார். நீளமான தையல் ஊசி கழுத்தில் குத்தப்பட்டும், நல்வாய்ப்பாக அந்தப் பெண்ணின் கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் பாதிக்கப்படவில்லை.
ஊசியானது மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தின் அருகில் இருப்பதால் அறுவை சிகிச்சை மிகவும் சவாலாகவும், நோயாளியின் உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கும் என்பதால் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்தாலோசித்து முடிவெடுத்தனர். பின்னர், அறுவை சிகிச்சை செய்து துல்லியமாக ஊசி வெளியே எடுக்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின்போது மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய், தண்டுவடப் பகுதி நரம்புகள் பாதிக்கப்படவில்லை. சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமாக உள்ளார்" என்றார்.