தமிழகம்

மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.5 ஆயிரம்‌ நிவாரணம்‌: விஜயகாந்த் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தலா 5 ஆயிரம்‌ ரூபாய்‌ நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''வடகிழக்குப் பருவமழையால்‌ தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ கனமழை பெய்து, எங்கு பார்த்தாலும்‌ வெள்ளம்‌ கரைபுரண்டு ஓடுகிறது. மேலும்‌ ஏரிகள்‌, தரைப்பாலங்கள்‌ உடைந்து பல்வேறு கிராமங்கள்‌ வெள்ளத்தில்‌ மூழ்கித் தீவுபோல்‌ காட்சியளிக்கின்றன. இதனால்‌ சிறுக சிறுகச் சேர்த்து வைத்த பணம்‌, பொருட்கள்‌, உடமைகள்‌ உள்ளிட்ட அனைத்தையும்‌ வெள்ளத்தில்‌ கொடுத்துவிட்டு மக்கள்‌ நிர்க்கதியாக நிற்கின்றனர்‌.

பல லட்சம்‌ ஏக்கர்‌ விவசாய நிலங்கள்‌ மழைநீரில்‌ மூழ்கியுள்ளதால்‌ விவசாயிகளின்‌ வாழ்வாதாரமும்‌ கேள்விக்குறியாகியுள்ளது. எனவே தமிழகம்‌ முழுவதும்‌ தேங்கி நிற்கும்‌ மழை நீரை அகற்ற, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. தமிழகத்தில்‌ நீர்நிலைகள் சரியாகத் தூர்வாரப்படாததாலும்‌, போதிய வடிகால்‌ வசதி இல்லாததாலும்‌ இதுபோன்ற வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும்‌ மழை வெள்ளத்தில்‌ சிக்கி மக்கள்‌ தவிக்கும்‌ நிலை ஏற்படுகிறது. ஆனால்‌, தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும்‌ அதிமுகவும்‌, திமுகவும்‌ அதற்கு நிரந்தரத் தீர்வு காணவில்லை. இனியாவது தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி, மழை வெள்ளம்‌ ஏற்படாதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

தற்போது மழை வெள்ளத்தில்‌ பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குக் காலம்‌ தாழ்த்தாமல்‌ தலா ரூ.5 ஆயிரம்‌ நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும்‌. வெள்ளத்தால்‌ பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்‌. தேங்கி நிற்கும்‌ மழை நீரில்‌ கொசுக்கள்‌ உற்பத்தியாகி, நோய்‌த்தொற்று பரவும்‌ அபாயம்‌ உள்ளதால்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌ மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை சென்னை வரும்‌ மத்தியக் குழு, தமிழகத்திற்கு வேண்டிய நிதியை நிச்சயம்‌ ஒதுக்க வேண்டும்’’‌.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT