கரூரில் பிளஸ் 2 மாணவி பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டார். பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும் என உருக்கமான கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகேயுள்ள அரசு காலனியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி, வெண்ணெய்மலை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மாணவி அவரது டைரியில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.
அந்தக் கடிதத்தில், ”பாலியல் துன்புறுத்தலால் சாகுற கடைசிப் பொண்ணு நானாதான் இருக்கணும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைச்சாங்கன்னு எனக்குச் சொல்ல பயமா இருக்கு. இந்த பூமில வாழணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இப்போ பாதிலேயே போறேன். இன்னொரு தடவ இந்த உலகத்துல வாழ வாய்ப்பு கெடச்சா. நல்லா இருக்கும்.
பெருசாகி நிறைய பேருக்கு உதவி பண்ணணும்னு ஆசை. ஆனா முடியல. ஐ லவ் யூ அம்மா, சித்தப்பா, மாமா. உங்க எல்லாரையும் எனக்கு ரொம்பப் புடிக்கும். ஆனா, நான் உங்க கிட்டலாம் சொல்லாமப் போறேன். மன்னிச்சிடுங்க. இனி எந்த ஒரு பொண்ணும் என்ன மாதிரி சாகக்கூடாது. சாரி” என எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.
மாணவி எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வெங்கமேடு போலீஸார் தொடர்து விசாரணை நடத்தி வருகின்றனர்.