தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங் களை செயல்படுத்த வில்லை என்று திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்தார்.
திருநெல்வேலி டவுன் தேரடி திடலில் நேற்று முன்தினம் இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லியோனி பேசும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் தமிழக சட்டப் பேரவையில் 110 விதியின்கீழ் ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அவை அனைத்தும் 3 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார். ஆனால் நடைமுறைப்படுத்தவில்லை. பெண்களுக்கு சொத்தில் பங்கு என்ற சட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. இதுபோல் திமுக ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
திமுக தலைவர் கருணாநிதி தனது 93 வயதிலும் உலக தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டுவருகிறார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்துள்ளார். திமுக சார்பில் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. தேர்தலில் அதுதான் கதாநாய கனாக இருக்கும்’ என்றார் அவர்.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட திமுக செயலாளர் ஏ.எல். லெட்சுமணன், மத்திய மாவட்ட செயலாளர் மு. அப்துல்வகாப், பொருளாளர் பா. அருண்குமார், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா பங்கேற்றனர்.