சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், தீர்மானங்களுக்கு தாமதம் ஏற்படுவதை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகதான் கருத வேண்டும்என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இமாச்சல பிரதேச மாநிலம்சிம்லாவில் 82-வது சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு கடந்த 17-ம் தேதி நடந்தது. இதில்பங்கேற்ற தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பேரவையில் பேரவைத் தலைவர்களின் செயல்பாடு என்பது தன்னிச்சையான முடிவுகள் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் பெரும்பான்மையை கொண்ட கட்சியை சேர்ந்தவர் முதல்வராகவும், குறைந்த உறுப்பினர்களை கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் வந்து இணைந்து சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
எல்லோரும் இணைந்து ஏகமனதாக சில தீர்மானங்களும், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றின் மீது ஆளுநர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், சில தீர்மானங்கள் தாமதமாகி கிடப்பில் உள்ளன. எனவே, அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பேசும் உரிமை பெற்றிருந்ததால் இதைஒரு கருத்தாக எடுத்து வைத்தேன். ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு கால நிர்ணயம் அவசியம்என்ற கருத்துக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். மேலும், ஒப்புதலுக்கு அனுப்பினால் எப்போது வரும் என்பது புதிராக உள்ளது.
அதேபோல, மசோதாவை குடியரசுத் தலைவருக்கு எப்போது அனுப்ப வேண்டும் என்பதற்கான காலம் இல்லை. எனவே,கால நிர்ணயம் வேண்டும்.
குடியரசுத் தலைவரும் ஒரு சட்டத்தின் மீது ஆதரவாகவோ, எதிராகவோ எந்த கருத்தையும் சொல்லாமல் ‘வித் ஹெல்டு’ என ஒதுக்கி வைக்கிறார். எதனால் சட்டம் நிராகரிக்கப்பட்டது, ஏன் உடனே அனுமதி தரவில்லை என எந்த விளக்கமும் அளிக்கப்படுவது இல்லை. இதில் தெளிவுவேண்டும். இதில் பேரவைத் தலைவர், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பது இல்லை. அதிகாரம் படைத்தவர்கள் மக்கள்தான். அவர்கள் வாக்களித்துதான் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருகின்றனர்.
எனவே, பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டத்துக்கோ, தீர்மானத்துக்கோ தாமதம் ஏற்படுவதை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகதான் கருதவேண்டும். பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் நான் எடுத்து வைத்த புள்ளியை எல்லோரும் ஏற்கும் காலம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.