எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பளக் கமிஷன்படி ஊதிய உயர்வு வழங்குவதை கிடப்பில் போட வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்ல சாமி, தலைவர் பாண்டியன் ஆகி யோர் மதுரையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து அவர்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் விவசாயக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் 2005-ல் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. இதில், அரசுப் பண்ணைகளில் ஒவ்வொரு விளை பொருட்களையும் விளைவிக்கும் செலவை கணக்கிட்டு, அதனுடன் சரிபாதியை லாபமாக சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதை முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பாஜக அரசும் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது சம்பளக் கமிஷன் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி வரை வழங்க உள்ளது. விவசாயக் கமிஷன், சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை ஒரே நாளில் நிறைவேற்ற வேண்டும். அதுவரை 7-வது சம்பளக் கமிஷன் பரிந்துரையை கிடப்பில் போட வேண்டும்.
அரசு ஒதுக்கும் உணவு மானியத் தின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உணவுப் பொருட்களுக்கே செல்கிறது. இதற்கு அரசின் தவறான இறக்குமதிக் கொள்கை, சுயநலத் திட்டமிடலே காரணம். இதைத் தடுத்து, இந்தியாவில் உற்பத்தியாகும் எண்ணெய் உள் ளிட்ட உற்பத்திப் பொருட்களுக்கு மானியம் அளித்தாலே விவசாயிகள் தற்கொலையை முழுமையாக தடுக்கலாம்.
தமிழகத்தில் மட்டுமே ‘கள்’ இறக்க, பருக 29 ஆண்டுகளாக தடை உள் ளது. இதை நீக்கினால் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். இத் தடையை நீக்க 10 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் போராடி வருகி றது. கள்ளை போதைப்பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு தருவதாக சவால் விடுத்தும், நேரடி விவாதத்துக்கு யாரும் முன்வர வில்லை.
தேர்தலை புறக்கணிப்போம்
தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் தலைவர்கள், வேட்பாளர்களிடம் ‘கள்’ குறித்து கேள்வி கேட்போம். இந்த விஷயத்தில் கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். எங்கள் கொள்கையை ஆதரிக்கும் முக்கிய கட்சியை ஆதரிப்போம். இதிலும் எங்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நாங்களே வேட் பாளர்களை நிறுத்துவோம் அல் லது தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்போம்.
கடன் பிரச்சினையில் தஞ்சாவூர் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை குறித்து நாளை (இன்று) தஞ்சாவூரில் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவை எடுக்கவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.