தமிழகம்

அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது: அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம்

செய்திப்பிரிவு

மலையே மகேசன் என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

நினைக்க முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. பின்னர், கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றப்பட்டதுடன், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

அதிகாலையில் பரணி தீபம்

கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மகா தீபம் நேற்று ஏற்றப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் பரணி தீபத்தை சிவாச்சாரியர்கள் ஏற்றினர்.

இதைத் தொடர்ந்து ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணியளவில் மகா தீபத்தை பருவத ராஜகுல சமூகத்தினர் ஏற்றினர். அப்போது சிவ வாத்தியம் முழங்க ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. மகா தீப தரிசனத்தை மக்கள் தரிசித்தனர். அதன்பிறகு, கோபுரங்கள் உட்பட கோயிலில் உள்ள அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. மேலும், வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. கார்த்திகை விரதம் இருந்த பக்தர்கள், தினை மாவு உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர்.

அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீப தரிசனத்தை,11 நாட்களுக்குத் தொடர்ந்துபக்தர்கள் காணலாம்.

SCROLL FOR NEXT