கோவையில் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் மூலம், அவதூறு குறுந்தகவல்கள் அனுப்பியும், பேசியும் பாலியல் தொல்லை அளித்ததாக, கோவை அரசு கலைக்கல்லூரியின் துறைத் தலைவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
கோவை ரேஸ்கோர்ஸில் உள்ளஅரசு கலைக்கல்லூரியில் பிபிஏபாடப்பிரிவின் துறைத் தலைவராக விளாங்குறிச்சியைச் சேர்ந்த என்.ரகுநாதன்(42) பணியாற்றி வருகிறார். இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு வாட்ஸ்அப்மூலமாக அவதூறு குறுந்தகவல்கள் அனுப்புவதாக மாணவிகள் தரப்பில் புகார்கள் கூறப்பட்டன. இந்நிலையில், இந்திய மாணவர் சங்கத்தின், கோவை மாவட்டப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் நேற்றுமுன்தினம் மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘‘கோவை அரசு கலைக்கல்லூரியில் பிபிஏ துறைத் தலைவராக உள்ள என்.ரகுநாதன், தன் துறையில் படிக்கும் மாணவிகளுக்கு இரவு நேரங்களில் வாட்ஸ்அப் மூலம் அவதூறான குறுந்தகவல்கள் அனுப்புவது, இரவு நேரங்களில் செல்போனில் அழைத்து மாணவிகளிடம் தவறாக பேசுவது என செயல்படுகிறார். ஒரு மாணவியிடம் பாடநோட் தருகிறேன் எனக்கூறி, காரில்ஏற்றிச் சென்று அவதூறாக நடந்துள்ளார். இதுதொடர்பான புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் மூலம் கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால்,தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ எனக் கூறப்பட்டு இருந்தது. இப்புகார் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே, துறைத் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்திய மாணவர்கள் சங்கத்தினர், அரசு கலைக்கல்லூரி முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவர் சங்கத்தினர் அளித்த புகார் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸார், என்.ரகுநாதன் மற்றும் மாணவிகளிடம் நேற்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் துறைத் தலைவர் என்.ரகுநாதன் மீது மானபங்கம், கடத்தல், கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து நேற்று இரவு அவரை கைது செய்தனர்.
முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறும்போது, ‘‘இதுதொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.