வாழ்க்கைக்குத் தேவையான வழி காட்டியாக பாரதிதாசன் பாடல்கள் இருக்கின்றன என சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில் பேசிய எழுத்தாளர் சிலம்பொலி செல்லப்பன் தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 125-ஆம் ஆண்டுவிழா கருத்தரங்கம் பல்கலைக்கழக மெரினா வளாகம், பவளவிழாக் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவில் எழுத்தாளர் சிலம்பொலி சு.செல்லப்பன் பேசியதாவது:
20-ஆம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் புலவர்களில் மிக முக்கியமானவர் பாரதிதாசன். பாரதியார், பாரதிதாசன் இருவரை யும் பிரித்துப் பார்க்கத் தேவை யில்லை. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தனர்.
தமிழை உயிர் என்று சொன்ன முதல் கவிஞன் பாரதிதாசன். தனித் தமிழில் எழுதியும், பேசியும் தமிழை வளர்த்தார். மது ஒழிப்பு குறித்து,‘அம்மா இனி குடிக்க மாட்டோம்’ எனும் தலைப்பில் பாரதிதாசன் பாடினார்.
பாரதிதாசன் சங்க இலக்கிய பாடல்களை மிக எளிமையான வடிவில் வழங்கியவர். அரசிய லில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும், உழைப்பவர் நலன் காக்கப்பட வேண்டும் என பாடிய வர் . வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டியாக அவரது பாடல்கள் இருக்கின்றன. ஆனால், அவரது பெயரில் கல்லூரிகளில், பல்க லைக்கழகங்களில் விழா எடுப் பதும் நிகழ்ச்சிகள் நடத்துவதும் அரிதாகி வருகிறது. அவரது கருத்துக்கள் போற்றப்பட வேண்டும். அவருக்கு விழா எடுப்பதன் மூலம் தமிழ் மொழி வளரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவுக்கு தமிழ் மொழித்துறை பேராசிரியர் ய.மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். தமிழ் மொழித்துறை தலைவர் அ.பாலு முன்னிலை வகித்தார்.