தமிழகம்

தேர்தலுக்கு அதிக நாட்கள் இருப்பதால் நிதானத்தை கடைபிடிக்கும் கட்சிகள்

எம்.மணிகண்டன்

தேர்தலுக்கு 65 நாட்களுக்கு மேல் உள்ள காரணத்தால் தேர்தல் பணிகளின் வேகத்தை முக்கிய அரசியல் கட்சிகள் குறைத்துக் கொண்டுள்ளன.

தமிழக அரசியல் கட்சிகள், சட்டப்பேரவை தேர்தல் வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே போட்டி போட்டு தொடங்கின. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே பயணம்’ மேற்கொண்டார். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மண்டல மாநாடுகளை நடத்தினார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். மக்கள் நலக் கூட்டணியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மாதத்தில் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், தமாகா என முக்கிய கட்சிகள் அனைத்தும் விருப்ப மனுக்களை பெற்றன. திமுக சார்பில் உறுதியேற்பு மாநாடு, தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாடு, மக்கள் நலக் கூட்டணியின் மாற்று அரசியல் மாநாடு, பாமகவின் அரசியல் மாற்றத்துக்கான மாநாடு என பல்வேறு மாநாடுகளும் கடந்த மாதம் நடத்தப்பட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடந்தன. வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்களும் வேகமாக நடந்தன.

ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இந்த வேகம் குறைந்துள்ளதை காண முடிகிறது. தமிழகத்தில் மே 16-ம் தேதிதான் வாக்குப் பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கலே அடுத்த மாதம் 22-ம் தேதிதான் தொடங்குகிறது. வாக்குப் பதிவுக்கு அதிக நாட்கள் உள்ளதால், அரசியல் கட்சிகள் நிதானமாகவே பணிகளை மேற்கொள்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு திமுக, தேமுதிக, காங்கிரஸ் அலுவலகங்களில் தொண்டர்களின் வருகை அதிகளவில் இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தொண்டர்களின் வரத்து குறையத் தொடங்கியுள்ளது. வேகமெடுத்த கூட்டணி முயற்சிகளும் தற்போது குறைந்துள்ளது.

திமுக தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கான கடைசி நேர சரிபார்ப்புகள், வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தரப்பிலும் தேர்தல் குழு அமைத்தல், வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்க தயாரித்தல் போன்ற பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணியை அறிவிப்பேன் என்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போதும் மவுனத்தை தொடர்கிறார். தேர்தல் தேதி தள்ளிப் போனதால், மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் விருப்ப மனு பெறுவது உள்ளிட்ட பணிகளை தள்ளிப்போட்டுள்ளன.

தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் பணிகளை தொடங்கிய சிறிய கட்சிகளும் தற்போது அமைதி காக்கின்றன. பொருளாதாரமும் உழைப்பும் முன்கூட்டியே விரயமானால், தேர்தல் நேரத்தில் சிக்கலாகிவிடும் என்று கருதி, அரசியல் கட்சிகள் நிதானத்தை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT