டிராவல் ஏஜென்சியின் பெயரில் போலி வலைதளத்தை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்ட நபர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதை சைபர் க்ரைம் போலீஸார் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பிரபல தனியார் டிராவல் ஏஜென்சியின் பெயரில் சிலர் போலிவலைதளத்தை தொடங்கி அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது. இதுபற்றிய புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிந்துவிசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் விசாரணையில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தேவராஜ் சிங், ஷ்ரவன்சிங் ஆகிய இரு குற்றவாளிகள் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தேவராஜ்சிங்கின் இளைய சகோதரர் திலீப்சிங் என்பதும் அவர் தாய்லாந்தில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க சைபர் க்ரைம் போலீஸார் தனிப்படை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘மோசடிக்கு மூளையாக செயல்பட்ட திலீப்சிங் தாய்லாந்தில் உள்ளார். அவர் பிரபல டிராவல் ஏஜென்சியின் பெயரில் போலி வலைதளம் தொடங்கி டூர் பேக்கேஜுக்காக பதிவு செய்பவர்களை ஏமாற்றி தேவராஜ் சிங் மற்றும் ஷ்ரவன் சிங் ஆகியோரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படி செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் போலி வலைதளத்தில் பதிவு செய்த நபர்கள் அனுப்பிய பணத்தை பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர்.