செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரப்பகுதியில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ரிஷப தீர்த்தக் குளம் பக்தர்கள் நீராடும் புண்ணிய தீர்த்த குளமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் ரிஷப தீர்த்தக் குளம் முழுமையாக நிரம்பி வழிவதால், மூலவர் பிரகாரம்உட்பட கோயில் வளாகம் முழுவதும் சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால், பக்தர்கள் முழுங்கால்அளவு தேங்கியுள்ள தண்ணீரில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், தண்ணீரை வெளியேற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, உள்ளூர் பக்தர்கள் கூறியதாவது: கோயிலை சுற்றிலும் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் அமைந்திருந்தன. இதன்மூலம், கோயில் குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் இந்த கால்வாய்கள் மூலம் வெளியேறின. ஆனால், கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் சாலை அமைக்கும்போது, கோயில் குளத்தின் தண்ணீர் வெளியேறுவதற்கான கட்டமைப்புகளை கருத்தில் கொள்ளாமல் சாலைகள் உயர்த்தி அமைக்கப்பட்டதாலும், கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும் தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சுவாமி தரிசனம்,தீப தரிசனத்துக்காக வந்த பக்தர்கள்பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.அதனால், பேரூராட்சி நிர்வாகம் கோயில் குளத்தின் தண்ணீரை வெளியேறுவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: தாழக்கோயில் வளாகத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின்மோட்டார்கள் மூலம்குளத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குளம் நிரம்பினால் தண்ணீர் வெளியேறுவதற்கான, கால்வாய் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும்படி பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.