மாநில, தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்களை குவித்த ஏழை விவசாயி மகன் விஷ்ணு, சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதற்கான கட்டணத்தை செலுத்த வசதி இல்லாததால் தவித்துக் கொண்டிருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டை அருகே உள்ள மறுத்தாணி கிராமத்தை சேர்ந்த ஏழை விவசாயி நாச்சியப்பன். இவரது மூத்த மகன் விஷ்ணு 6-ம் வகுப்பு படிக்கிறார். ரோலர் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் கொண்ட விஷ்ணு, கடந்த ஓராண் டுக்கும் மேலாக ஸ்கேட்டிங் பயிற்சி கள் மேற்கொண்டு, பல போட்டி களில் சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல்லில் கடந்த செப்டம் பரில் நடந்த 10 -12 வயதினருக்கான டிவிஷனல் அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்த விஷ்ணு, அதே மாதத்தில் காரைக்குடியில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியிலும் முதலாவதாக வந்து தங்கப் பதக் கம் வென்றார்.
இதைத் தொடர்ந்து, சென்னை யில் அக்டோபரில் நடந்த மாநில அளவிலான 2 போட்டிகளில் 2, 3-ம் இடங்களைப் பிடித்து வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை தட்டி வந்தார். அடுத்து, நாக்பூரில் நவம்ப ரில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு 2 தங்கப் பதக்கங்களை வென்றார்.
இப்படி தொடர் வெற்றிகளை குவித்த விஷ்ணு, கோவாவில் கடந்த பிப்ரவரியில் நடந்த சர்வ தேச போட்டிகளுக்கான தகுதித் தேர்விலும் 2-வதாக வந்து தேர்வா னார். மலேசியாவில் ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகள் நடக்க உள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதானால் விஷ்ணு ரூ.1.75 லட்சம் கட்டவேண்டும். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை புரட்ட விவசாயி நாச்சி யப்பனுக்கு சாத்தியப்படாது என்ப தால், சர்வதேசப் போட்டியில் கலந்து கொள்ளமுடியாமல் போய் விடுமோ என்ற தவிப்பில் இருக் கிறது விஷ்ணு குடும்பம்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய நாச்சியப்பன், ‘‘உள்ளூர் போட்டிகளுக்கு கையில மடியில இருந்த காசை போட்டு சமாளிச் சிட்டோம். நாக்பூர், கோவா போற துக்கு சொந்தக்காரங்களும் மாமனார் வீட்டுலயும் உதவி செஞ்சாங்க. 25,800 ரூபாய் வட்டிக்கு வாங்கித்தான் கால்ல மாட்டிக்கிற வீல் வாங்கிக் குடுத்தோம். ஆனா, இப்பச் சொல்லிருக்க தொகை நமக்கு பெரிய காசு. புள்ளைய நெனச்சா பாவமா இருக்கு. என்ன செய்ய, கையில காசு இல்லியே’’ என்றார்.
எதிர்பார்ப்புடன்...
‘‘எங்க பள்ளிக்கூடத்துல மொத்தம் 5 பேரு ஸ்கேட்டிங் பண் றோம். எனக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. மலேசி யாவுக்கு போறதுக்கு முன்ன, ‘ரோல்பால் மேட்ச்’ இலங்கையில மே மாசம் நடக்குது. அதுலயும் கலந் துக்கச் சொல்லி அழைச்சிருக் காங்க. அதுக்கு தனியா 95 ஆயிரம் கட்டணும். அதுல கலந்துக்காட்டி கூட பரவால்ல. மலேசியா சர்வ தேசப் போட்டியில எப்டியாச்சும் கலந்துக்கணும். எதாச்சும் உதவி கிடைக்கும்னு ஆசையா காத்திட் டிருக்கேன்’’ என்று பரிதாபமாய் கூறுகிறார் விஷ்ணு.
திறமை இருந்தும் ஏழ்மையால் கேள்விக்குறியாகி நிற்கிறது விஷ்ணுவின் ஸ்கேட்டிங் கனவு! அதை நிறைவேற்றி வைப்பது பல நல்ல உள்ளங்களின் கைகளில் இருக்கிறது. தொடர்புக்கான எண்: 8508065066.