தென்பெண்ணையாற்றில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மற்றும் பண்ருட்டிப் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் புகுந்த குடியிருப்பு பகுதிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வட கிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பிஇ உபரி நீர் வாய்க்கால்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளையும், விளைநிலங்களிலும் புகுந்துள்ளது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் தென்பெண்ணையாற்றில் கடந்த சில தினங்களாக ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில்இ நேற்று பெய்த தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 85 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி நெல்லிக்குப்பம் பகுதியில் தென்பெண்ணையாற்றிலும்,கெடிலம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடலூர் அருகே அழகிய நத்தம், வடக்கு நத்தம் இரண்டாயிரம் விளாகம்,மணல்மேடு, எம்.பி அகரம், களையூர், கிருஷ்ணாபுரம், உச்சிமேடு, நாணமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், நத்தப்பட்டு, சாவடி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் சுமார் 5000 ஏக்கர் விளைநிலங்கள் இப்பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் ஆற்றின் வெள்ள நீர் சூழ்ந்ததால் சுமார் 5 ஆயிரம் கிராம குடியிருப்புப் பகுதி கிராம மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்
இதனிடையே கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர்ப் பகுதியிலுள்ள குண்டு சாலை, குமரப்பன் நகர், திடீர் குப்பம், இந்திராநகர், குறிஞ்சி நகர், எம்ஜிஆர் நகர், கே.டி.ஆர். நகர், தாழங்குடா, செந்தாமரை உள்பட சுமார் பகுதிகளில் தென்பெண்ணை ஆற்று வெள்ள நீர் புகுந்தது. இதன் காரணமாக சுமார் 7 ஆயிரம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து காட்சி அளிக்கிறது.
கடலூர் பகுதியில் நகர, கிராம என இரு பகுதிகளிலும் சுமார் 12 ஆயிரம் குடியிருப்புகள் தென்பெண்ணை ஆறு வெள்ளப்பெருக்கால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால் கடலூர் சுங்கச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் படகுகள் மூலமாக பொதுமக்களை மீட்டு முகாம்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகங்கணாங்குப்பத்தில் சிறார் காப்பகத்தில் உள்ள 32 மாணவிகள் உட்பட சுமார் 300 பேர் வரையில் படகுகள் மூலமாக மீட்கப்பட்டதாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் பெ.லோகநாதன் தெரிவித்தார்.
மாவட்ட நிர்வாகம் அலட்சியம்.....
விழுப்புரம் மாவட்டத்தில் சாத்தனூர் அணை திறப்பு, தளவானூர் அணைக்கட்டு மற்றும் எல்லீஸ் அணைக்கட்டு உடைந்ததால் தண்ணீர் வெளியேற்றம் போன்றவற்றால் தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வெளியேறியது. தென்பெண்ணை ஆற்றில் நேற்று 10501 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேறிய நிலையில் இன்று காலை சுமார் 78 ஆயிரம் கன அடியும் பின்னர் படிப்படியாக அதிகரித்து சுமார் 1.20 லட்சம் கன அடி தண்ணீரும் வெளியேறியது. இதனால் காலை முதலே ஆற்றின் கரையிலிருந்து தண்ணீர் படிப்படியாக குடியிருப்புகளுக்குள் புக தொடங்கியது.
ஆனால் இதுகுறித்து கடலூர் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மட்டுமே அறிவிப்பு வெளியிட்டது. சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் வரும் என்றோ அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்சியர் அலுவலகத்தை சூழ்ந்த வெள்ள நீர்
தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரகத்தை வெள்ள நீர் பல்வேறு வழிகளிலும் சாலையைக் கடந்து சென்று நான்குபுறமும் சூழ்ந்தது. இதனால்இ மாவட்ட ஆட்சியரகத்திற்கே வெள்ளத்தை கடந்து தான் வர வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது.