தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை ஒட்டி அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங் களில் முதல்வர் படங்களை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
தமிழக தேர்தல் தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட் டது. இதையடுத்து அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, அரசு நிர்வாகம் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல் பலகைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெற்றுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து அந்த படங்கள் அகற்றப்பட வேண்டும். இதன் படி அன்றே தலைமைச் செயலகத்தில் படங்களை அகற்றும் பணிகள் நடந்தன. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் படம் பதிக்கப்பட்ட அரசு விளம்பர போர்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னையில் புதிதாக அமைக் கப்பட்ட பஸ் நிறுத்தங்களின் பின்புறம், முதல்வர் படத்துடன் கூடிய அரசு சாதனை விளக்கும் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை மறைக்கும் பணிகள் நடந்து வருகின் றன. சாலைகளின் இரு புறமும் தனியார் சுவர்களில் எழுதப்பட்டுள்ள கட்சி விளம்பரங்களை வெள்ளை அடித்து மாநகராட்சியினர் மறைத்து வருகின்றனர்.
ஏற்கெனவே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இது தொடர்பாக கூறும்போது, ‘‘சுவர் விளம்பரங்களை வெள்ளை பூசி அழிக்கும் பணிகள் ஞாயிற்றுக் கிழமையுடன் முடியும்’’ என்றார். இதையடுத்து, பல்வேறு மாநகரா ட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சுவர் விளம்பரங்கள், முதல்வர் பெயர் கொண்ட போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணிகள் நேற்று, அதிகாரிகள் முன்னிலையில் விரைவாக நடந்தன.