தொண்டர்களை பாமக தலைமை நல்வழிப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்த விசிக தலைவர் திருமாவளவனிடம் 'ஜெய் பீம்' பட சர்ச்சை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது திருமாவளவன் பதில் அளிக்கையில், “பாமக எந்தச் சமூகத்துக்காக பாடுபடுகிறோம் என்று சொல்கிறதோ, அதே சமூகத்துக்குப் பொதுவெளியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிடுகிறது. தலைவர்களே இதனைச் செய்யும்போது தொண்டர்கள் இதனைப் பெரிய அளவில் மாற்றும் நிலை ஏற்படுகிறது. இதனால் தமிழகத்தில் சமூகப் பதற்றம் ஏற்படும் சூழல் அதிகரித்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக சமூக வலைதளங்களில் வெறுப்பு நிலவுவதை நாம் பார்க்கிறோம்.
விமர்சன சுதந்திரம் அனுமதிக்க வேண்டிய ஒன்றுதான். உள்ளபடியே ஒரு சமூகத்தின் உணர்வைக் காயப்படுத்தும் வகையில் இருந்தால் நாம் அனைவரும் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால், அவ்வாறு உள்நோக்கம் இல்லை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். தொண்டர்களை பாமக தலைமை நல்வழிப்படுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.