டி.ஆர்.அன்பழகன் 
தமிழகம்

ஆள் கடத்தல், தாக்குதல் வழக்கில் அதிமுக மாநில நிர்வாகி உட்பட 3 பேர் தருமபுரியில் கைது

செய்திப்பிரிவு

அதிமுக விவசாய அணி மாநில தலைவரான தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.அன்பழகன் உட்பட 3 பேர், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் தாளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் டி.ஆர்.அன்பழகன் (58). இவர், அதிமுக விவசாய அணியின் மாநில தலைவராகவும், ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க தருமபுரி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக பென்னாகரத்தில் ஜல்லி கிரஷர் உள்ளது.

இங்கு, இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் டீசலை, அதே பகுதியில் உள்ள ஜெல்மாரம்பட்டி முத்துவேல்(36), சுரேஷ்(32) ஆகியோர் திருடியதாகக் கூறி இருவரையும் டி.ஆர்.அன்பழகன், கடத்திச் சென்று தாக்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து முத்துவேலின் தந்தை பெரியசாமி பென்னாகரம் காவல் நிலையத்தில் கடந்த 17-ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார் டி.ஆர்.அன்பழகன், தாளப்பள்ளத்தைச் சேர்ந்த முருகன் (36). கொட்லுமாரம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (32) ஆகிய 3 பேர் மீது ஆள் கடத்தல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

3 பேரையும் 17-ம் தேதி மாலையே கைது செய்த போலீஸார், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திடீர் நெஞ்சுவலி

அப்போது, டி.ஆர்.அன்பழகன் நெஞ்சு வலிப்பதாகவும், ரத்த அழுத்தம் அதிகமானதாகவும் கூறியதால் அவரை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மற்ற இருவரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக தருமபுரியில் இருந்து நேற்று டி.ஆர்.அன்பழகன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சைக்கு பின்னர்அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து டி.ஆர்.அன்பழகனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT