மேடவாக்கம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(80). இவர் மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை மேய்ச்சலுக்கு மாடுகளை அனுப்பினார். இந் நிலையில் மதியம் 1 மணி அளவில் மேடவாக்கம் பாபு நகர், ரவி பிரதான சாலையில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. அந்த பகுதியை கடந்து செல்ல முயன்ற 2 பசு மாடுகள், 2 கன்றுகள், ஒரு எருமை மாடு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. உடனடியாக மின் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மேடவாக்கம் தீயணைப்பு இறந்து கிடந்த மாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
மேடவாக்கம் கால்நடைத் துறை மருத்துவர் மைதிலி இறந்த மாடுகளுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டார். தகவல் அறிந்த சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்சார வயர் அறுந்து விழுந்த இடத்தை பார்வையிட்டு மாடு உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.