தமிழகம்

மாமனார் வீட்டின் முன்பு மகன்களுடன் பெண் போராட்டம்

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் தன் இரு மகன்களுடன் மாமனார் வீட்டின் முன்பு பெண் ஒருவர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவில்பட்டி வேலாயுதபுரத் தைச் சேர்ந்த ராஜகோபால் மகன்காமாட்சிராஜன் (41). இவருக்கு கீதா (38) என்ற மனைவியும், ஜெயசூர்யா (15), அரவிந்தகார்த்திக் (13) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். காமாட்சிராஜன், தனது தந்தை ராஜகோபாலுடன் இணைந்து பழக்கடை நடத்திவந்தார். பழக்கடையை ராஜகோபால் விற்க முயன்றுள்ளார். ஆனால், கடையை தானே நடத்துவதாக காமாட்சிராஜன் கூறியுள்ளார். இப்பிரச்சினையில், விஷமருந்திய காமாட்சிராஜன் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ம் தேதி உயிரிழந்தார்.

இதுகுறித்து, கீதா அளித்த புகாரின் பேரில், காமாட்சிராஜனை தற்கொலைக்கு தூண்டியதாக, காமாட்சிராஜனின் சகோதரியின் கணவர் முத்துராஜை போலீஸார் தேடி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பழக்கடையை திறந்துகீதா வியாபாரம் செய்ய முயன்றார். போலீஸார் தலையிட்டு, கடையின் சாவியை ராஜகோபாலிடம் கொடுத்தனர். நேற்று காலை, கீதா தனது இரு மகன்களுடன் ஜோதி நகர் 2-வது தெருவில் உள்ள மாமனார் ராஜகோபால் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவர்களை வீட்டுக்குள் ராஜகோபால் அனுமதிக்கவில்லை. இதையடுத்து கீதா தனது இரு மகன்களுடன் வீட்டு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் மற்றும் போலீஸார், ராஜகோபால் மற்றும் கீதா ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கீதாவின் குடும்ப செலவுக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகவும், பின்னர் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துபேசி உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் என ராஜகோபால் கூறியதையடுத்து, கீதா தனது மகன்களை அழைத்துச் சென்றுவிட்டார்.

SCROLL FOR NEXT