தமிழகம்

சென்னைக்கு அதிகனமழை ‘ரெட் அலர்ட்’ வாபஸ்; தமிழக கடல்பகுதியை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

செய்திப்பிரிவு

வங்கங்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னை அருகே கரையைக் கடக்கும். இதன் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் தெரிவித்து இருந்தது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், டெல்டா மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் கூறியிருந்தது.

திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், வட கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. திசையில் காற்று வீசும் எனவும் அறிவித்து இருந்தது.

இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலை குறித்து இன்று இரவு சென்னை வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

வங்கங்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவாய்ப்பில்லை. தற்போது சென்னைக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் வங்கடலில் தென் கிழக்கில் நிலை கொண்டுள்ளது. இது மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. இது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதிகனமழை பெய்யும் என விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டுக்கு பதில் ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது.
அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அதிகனமழை முதல் மிக அதிகனமழை வரை பெய்ய வாய்புள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT