புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் செயலாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அதன் மாநிலச் செயலாளர்கள் அப்துல் ரகுமான், அப்துல்லா ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் அப்துல் ரகுமான் கூறியதாவது: தமிழகம், புதுவையில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு அளிக்காது. மேலும், யாருக்கும் ஆதரவாக களப்பணிகளில் ஈடுபடமாட்டோம்.
முஸ்லிம்களுக்கு ஆதரவாளராக கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், வேட்பாளர் தேர்வில் முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முஸ்லிம் மதத்தை தழுவிய மாற்று மதத்தைச் சார்ந்தவர்களை முஸ்லிம்களுக்கு உரிய பி.சி.எம் பிரிவில் சேர்த்து, அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.
முன்னதாக நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட புதிய தலைவராக அஷ்ரப், செயலாளராக முகமது கபீர், பொருளாளராக சாதிக் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.