விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரியில் மீண்டும் தாழ்வான பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
புதுவையில் கடந்த 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. 10 நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக புதுவையில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பின. மொத்தமுள்ள 84 ஏரிகளில் 65 ஏரிகள் நிரம்பியுள்ளன. புதுவையின் மிகப்பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாகூர் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
வழக்கமாகப் புதுவையில் மழை வெள்ளம் தேங்கும் பாவாணர் நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், நடேசன் நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 3 நாட்களாகப் புதுவையில் மழை இல்லாத சூழ்நிலையில், மீண்டும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக நேற்று மாலை முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
விடிய விடிய பெய்த மழை காரணமாக மீண்டும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையின் காரணமாகப் புதுவை, காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரப் பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக இந்திரா காந்தி சிலை, சிவாஜி சிலை, புஸ்சி வீதியில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.
இதனால் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.
ஏற்கெனவே பெய்த தொடர் மழையின் பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் மழைப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.