தமிழகம்

பல்லடம்; வீடுகளில் சூழ்ந்த மழைநீர்: 5 குழந்தைகள் உட்பட11 பேர் படகு மூலம் மீட்பு

இரா.கார்த்திகேயன்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்த 5 குழந்தைகள் உட்பட 11 பேரை படகுகள் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தமிழகத்தில் வங்கக்கடலில் ஏற்பட்டு உள்ள குறைந்த காற்று அலுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.

அதன் படி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. குறிப்பாக பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளான பொங்கலூர், பனப்பாளையம், காமநாயக்கன் பாளையம், அவினாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஆரம்பித்த கன மழை நள்ளிரவு வரை நீடித்தது.இந்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியதால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டது.

இந்நிலையில் அவினாசிபாளையம் பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக பாலாஜி நகர் குடியிருப்பு பகுதிகளில் இருந்த வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.இதனால் காலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.

தவீட்டில் இருந்தவர்கள் அவினாசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் வீடுகளில் சிக்கியிருந்த சங்கர்,பிரியா அவர்களது குழந்தைகளான ஸ்ரீமதி(12),ஸ்ரீ ஹரி(9) மற்றும் மற்றொரு குடும்பமான கார்த்திக், கார்த்திகா,மகாலட்சுமி,முத்துச்செல்வம் பிரவீன்(8),பிரனிதா(6),தர்ஷீத்(2) ஆகியோரை ரப்பர் படகு மூலம் மீட்டு வந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT