சிறுசேமிப்புக்கான வட்டியை குறைக்கக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சேமிக்கும் பி.பி.எப், கிசான் விகாஸ் பத்திரம், அஞ்சலக சேமிப்பு போன்ற சிறுசேமிப்புகளுக்கு மத்திய அரசு வட்டி வீதத்தை குறைக்க முடிவு எடுத்துள்ளது.
சாதாரண மக்கள் எதிர்கால நலன் கருதி சிறுக சிறுக சேமிக்கின்றனர். அந்தப் பணத்தை அரசு திட்டங்களிலேயே முதலீடு செய்து சேமிப்பதை அவர்கள் பாதுகாப்பானதாக கருதுகிறார்கள்.
அரசின் சிறுசேமிப்பு திட்டம் என்பது ஏழை, எளிய மக்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும். பணியில் இருந்து ஓய்வுபெறும் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் மற்றும் முதியோர்கள் போன்றவர்களுக்கு சிறுசேமிப்பு வட்டி குறைப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, வட்டி குறைப்பு முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.