கோப்புப் படம். 
தமிழகம்

‘க்ரியா’ ராமகிருஷ்ணன் நினைவு கட்டுரைகள் தொகுப்பு நூல் இணையவழியில் வெளியீடு

செய்திப்பிரிவு

தற்காலத் தமிழ்ப் புத்தகப் பதிப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவரும் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் ஆசிரியருமான மறைந்த `க்ரியா' எஸ்.ராமகிருஷ்ணனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்' என்ற தலைப்பிலான இந்த நூலின் வெளியீடு இணையவழியில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நூலை வெளியிட்டு ‘தி இந்து’ என்.ராம் பேசியதாவது:

''ஹரப்பா நாகரிகம் குறித்து ’ஃப்ரண்ட்லைன்’ இதழில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை தொடர்பாக க்ரியா ராமகிருஷ்ணனுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘க்ரியா’ பதிப்பகம் வெளியிட்ட ஐராவதம் மகாதேவனின் ‘தி எர்லி தமிழ் எபிகிராஃபி’ நூலை ராமகிருஷ்ணன் மிகச் சிறப்பாகச் செம்மையாக்கம் (எடிட்டிங்) செய்து வெளியிட்டார். அவரது பங்களிப்புகளில் ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ உட்பட பல புத்தகங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘க்ரியா அகராதி’ தெற்காசிய மொழிகளின் நவீன அகராதிகளிலேயே மிகச் சிறந்தது.

பதிப்பாளர் என்பதையும் கடந்து மிகச் சிறந்த பண்பாளராக க்ரியா ராமகிருஷ்ணன் திகழ்ந்தார். அதனால்தான் அவர் மறைவுக்குப் பின்னும் போற்றப்படுகிறார். மிகவும் கடினமான புத்தகங்களையும் மிக நேர்த்தியாகவும் ஆழ்ந்த அக்கறையுடனும் அவர் செம்மையாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். ராமகிருஷ்ணனின் மறைவுக்குப் பிறகு அவர் நினைவாக ஒரு கருத்தரங்கை அவருக்கு நெருக்கமான நண்பர்களும் அறிஞர்களும் நடத்தினார்கள். அதில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து ‘தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள்' எனும் இந்த நூலை வடிவமைத்துள்ளனர். க்ரியாவின் புத்தகப் பாரம்பரியத்துக்கு ஏற்ப இந்த புத்தகத்தை அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

தமிழ் மொழிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள க்ரியா ராமகிருஷ்ணனின் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கு தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும்''.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இஸ்ரேலைச் சேர்ந்த இந்தியவியல் அறிஞர் டேவிட் ஷுல்மன், எழுத்தாளர் திலீப் குமார், தூதரக அதிகாரி (ஓய்வு) டி.கே.கோபாலன், பேராசிரியர் இ.அண்ணாமலை உள்ளிட்ட அறிஞர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், ராமகிருஷ்ணனின் நண்பர்கள் போன்றோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT