திருப்போரூரை அடுத்த இள்ளலூர் இணைப்பு சாலை அருகே ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். 
தமிழகம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள்: சேதமடைந்துள்ள ஓஎம்ஆர் சாலையை சீரமைக்க கோரிக்கை

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், மண்கொட்டி மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்போரூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாதாள சாக்கடைக்காக ஓஎம்ஆர் சாலையில் தோண்டப்பட்டு மூடப்பட்ட பள்ளங்களில் மண் சரிவு ஏற்பட்டு மீண்டும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில், மழைநீர் தேங்கி நிற்பதாலும் பள்ளமாக உள்ளதாலும் வாகனங்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: பாதாள சாக்கடை பள்ளங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளதால், திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் இருந்து காலவாக்கம் வரை மற்றும் இள்ளலூர் செல்லும் இணைப்பு சாலை பகுதி உட்பட 2 கி.மீ. தொலைவு சாலையை கடந்த செல்ல அரைமணி நேரம் ஆகிறது. பேருந்து நிலையம் அருகே சாலை சகதியாக மாறியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. வாகன போக்குவரத்து மிகுந்த ஓஎம்ஆர் சலையில் சிரமப்பட்டு வாகனங்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT