கார்த்திகை மாதம் பிறந்ததை யொட்டி பல்வேறு கோயில்களில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
இவர்கள் அனைவரும் தினசரி ஐயப்பனை வேண்டி பூஜை செய்து 42-ம் நாள் சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க இருக்கிறார்கள்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள சபரிகிரி வாசன் கோயிலில் நேற்று ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர். விழுப்புரம் பூந்தோட்டம் சக்தி விநாயகர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது இதுபோல்,முத்துமாரியம்மன் கோயில், மருதூர் மாரியம்மன் கோயில், ரெயிலடி விநாயகர், ரங்கநாதன் சாலை சித்தி விநாயகர், காமராஜர் வீதி அமராபதி விநாயகர், பெருமாள் கோயில் வீதியில் உள்ள கோட்டை விநாயகர், மேலத்தெரு மாரியம்மன், கீழ்ப்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் ,விழுப்புரம் அருகே காணைசக்தி விநாயகர் கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் அதிகாலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
கரோனா பரிசோதனை
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கரோனா பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன்கோயிலில் மண்டல மற்றும்மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. சபரி மலை செல்லும் தென்மாநில பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பக்தர்கள் கேரளா காவல்துறையால் இயக்கப்படும் மெய்நிகர் வரிசையின் மூலம் பதிந்து நேரம் மற்றும் தேதியுடன் கூடிய அனுமதி அட்டை பெற வேண்டும். அவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
பக்தர்கள் நிலக்கல் அடிவாரத்துக்கு 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட, ‘கரோனா பாதிப்பு இல்லை’ என்ற சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும். சான்றிதழ் இல்லாதவர்களுக்கு நிலக்கல் செல்லும் வழியில் புதுவை அரசு கரோனா பரிசோதனை செய்ய போதிய ஏற்பாடுகள் செய்துள்ளது. பம்பை, சன்னிதானம், நிலக்கல் பகுதியில் இரவில் தங்க அனுமதியில்லை. தனியார் வாகனங்கள் பம்பை வரை இறக்கி விட அனுமதிக்கப்பட்டுள்ளது. பம்பையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மலை ஏற உடல் தகுதி உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்படும். புதுவை அவசர கால மையம் 0413-2253407, 1077, 1070, காவல்துறை கட்டுப்பாட்டு எண் 1030 ஆகியவற்றை பக்தர்கள் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய வேண்டும் என புதுவை இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.