மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
திருச்சி பீமநகரில் நேற்று முன்தினம் மாலை கட்சியின் ஜங்ஷன் பகுதிச் செயலாளர் வெற்றிச் செல்வன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்படாத நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
பெரியாரின் கோட்பாடுகளை திமுக, அதிமுக கட்சிகள் கைவிட்டுவிட்டன. தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 81 சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. இதைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலை தடுக்க ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வருவதோடு, ஊழல் செய்து சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்வோம். தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு, தனியார் பள்ளிகள் பெருகி வருவதை மாற்றியமைப்போம். பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக கட்சிகளுக்கெல்லாம் மாற்றாக மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றார் ராமகிருஷ்ணன்.
இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் ரூ.8.92 லட்சத்தை தேர்தல் நிதியாக வழங்கினார்.