தமிழகம்

அதிகனமழை: நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

செய்திப்பிரிவு

அதிகனமழை எச்சரிக்கையால் சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு மற்றம் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகடலோர மாவட்டங்களைத் தவிர இன்று மாலை முதல் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை போன்ற தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT