சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு மற்றம் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை வாய்ப்பு அதிகமுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், ''நாளை (18.11.2021) திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.