மிகப் பரபரப்பாகப் பேசப்படும் 'ஜெய் பீம்' படத்தை உண்மையிலேயே பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக பிரதிபலிக்கும் படமாக உள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்வதற்காக ஓசூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
’’மத்திய அரசாங்கம் இதுவரை இந்திய வரலாற்றிலேயே யாரும் செய்யத் துணியாத ஒரு செயலைச் செய்துள்ளது. உலகத்திலேயே தனித்துவமான நீதித்துறையை இந்தியா கொண்டிருக்கிறது. அதனுடைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றப்பட்டிருப்பதும், அந்த நீதித்துறையைச் சிதைப்பதற்கு மறைமுகமாக எடுக்கக்கூடிய மத்திய அரசின் நடவடிக்கைகளையும் இந்தியக் கம்யூனிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளை மிரட்டுவதற்கு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகிய துறைகளின் பொறுப்பாளர்களின் ஆயுட்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற கால அளவை ஐந்து ஆண்டுகளாக மாற்றி இருக்கிறார்கள். அதுவும் அவசரச் சட்டமாகக் கொண்டுவந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதற்கு முன்பாக ஒரு அவசரச் சட்டத்தைப் போட்டுள்ளனர். இது மிக மோசமான ஜனநாயகப் படுகொலையாகும்.
தமிழக முதல்வர் வெள்ள நிவாரணங்கள் எல்லாம் முடிந்தபிறகு, ஊழல் பற்றித் தனியாக விசாரணை அமைப்பேன் என்று கூறியிருக்கிறார். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஊழலற்ற ஆட்சி முறை தமிழகத்துக்கு வேண்டும். அந்த ஊழலற்ற ஆட்சி முறையை உருவாக்குவதற்கு அடித்தளத்தில் இருந்து மேல்தளம் வரை எல்லா மட்டத்திலும் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மிகப் பரபரப்பாகப் பேசப்படும் 'ஜெய் பீம்' படத்தை உண்மையிலேயே பார்த்தேன். என்னுடைய வாழ்க்கையை முற்றிலுமாக பிரதிபலிக்கும் படமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சாதாரண மக்களுக்கு, மறுக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 50, 60 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு எல்லாம் போராட்டம் நடத்தியதோ அந்தப் போராட்டத்துக்கு ஒரு கவுரவம் கொடுக்கும் வகையில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கும், அந்தப் படத்திலே நடித்த சூர்யாவுக்கும், படத்தை அருமையாக இயக்கிய ஞானவேலுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'ஜெய் பீம்' ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் படமா என்றால் கட்டாயம் இல்லை. அது ஒடுக்கப்பட்ட மக்கள், பாதிக்கப்பட்ட மக்கள், இருளர் இன மக்கள், சந்தேக கேஸ் என்ற பெயரில் இன்று வரை பாதிக்கப்பட்டு வரும் மக்களைப் பற்றி எடுக்கப்பட்டுள்ளது. 'ஜெய் பீம்' படத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவைத் தருகிறது.
இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் சூர்யாவோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக நின்று, இதை ஒரு தத்துவார்த்த அரசியல் போராட்டமாக நடத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு என்பது குறைவான தொகையாகும். கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.
இவ்வாறு சி.மகேந்திரன் தெரிவித்தார்.