அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.
அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய அனைத்தும் துணிப்பையுடன் சேர்த்து 20 பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கரும்பும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கலுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பணத்தைக் காணவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் நோக்கோடு கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசுப் பணமும், முழுக் கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால், திமுக அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் பணம், கரும்பைக் காணவில்லை.
தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுப் பணத்தைக் காணவில்லை,
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசுப் பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.