சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யும் சிலர் ஒழுங்காகப் பணிக்கு வருவதில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சித்த மருந்துகள் தயாரிக்கும் இடத்திற்குச் சென்று கபசுரக் குடிநீரைப் பருகி அவற்றை ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
''மே7-க்குப் பிறகு 100க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் இரு மையங்களை முதல்வரே தொடங்கி வைத்தார். இம்மையங்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நலமுடன் இல்லம் திரும்பியுள்ளனர். கரோனா காலத்தில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை உதவிகளை செய்தனர். அதே வகையில் டெங்கு மற்றும் மழைவெள்ள பாதிப்புக்கும் பணி செய்கிறார்கள்.
பேரிடர் காலத்தில் பணி என்பது கடினம்தான். இருப்பினும் சிலர் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்காது. பணி செய்யவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யும் சிலர் ஒழுங்காகப் பணிக்கு வருவதில்லை, பணி செய்வதில்லை. நாங்கள் குளிர்சாதன அறையில் இருந்துகொண்டு இதைச் சொல்லவில்லை. நாங்களும் உழைக்கின்றோம். நானே ஐசியூ வார்டுகளுக்கு 20 முறை சென்றிருக்கிறேன். மலை கிராமங்களுக்கு செவிலியர்கள் உடன் சென்று மருத்துவ சேவை செய்திருக்கின்றோம்.
அகில இந்திய ஒதுக்கீடு 15% மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றவுடன், தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். டிசம்பர் இறுதிக்குள் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை முதல்வர் சென்னையில் தொடங்கி வைப்பார்''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் மோகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.