நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்ததைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் இறைக்கும் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பெருநகரச் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாகப் பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடந்த திடக்கழிவுகள், வண்டல்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற மாநகராட்சியின் சார்பில் தீவிரத் தூய்மைப் பணி 12.11.2021 முதல் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தத் தீவிரத் தூய்மைப் பணியின் மூலம் சென்னை மாநகரில் நாள்தோறும் சுமார் 5700 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுக் கையாளப்பட்டு வருகின்றன. மேலும், மழையின் காரணமாக வண்டல்கள், சாலையின் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் மற்றும் மழைநீர் வடிகாலில் சென்று ஒருசில இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாகக் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கிய இடங்களில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள அதிக கவனம் செலுத்தப்பட்டு, இன்று இரவு பெய்யும் மழைக்கு முன்பே தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த வார மழையின்போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் ஆகியவற்றில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சியின் 448 மோட்டார் பம்புகள், வாடகைக்குப் பெறப்பட்ட 199 மோட்டார் பம்புகள், பிற துறைகளிலிருந்து பெறப்பட்ட 37 மோட்டார் பம்புகள் என மொத்தம் 684 நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 100க்கும் அதிகமான எச்.பி. திறன் கொண்ட 22 மோட்டார் பம்புகள், 50க்கும் அதிகமான எச்.பி. திறன் கொண்ட 28 மோட்டார் பம்புகள் அடங்கும்.
மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் வளர்ச்சித் துறையுடன் இணைந்து படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஆணையர் ககன்தீப் சிங் பேடி, பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வார்டு- 138, அசோக் பில்லர் பிரதான சாலையில் உள்ள குறுக்குப் பாலம் (Culvert) மற்றும் மழைநீர் வடிகாலில் மழையின் காரணமாக ஏற்பட்ட அடைப்புகள் சீர்செய்யப்பட்டதை இன்று (17.11.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், வார்டு-132க்குட்பட்ட 18 மற்றும் 19-வது அவென்யூ, 100 அடி சாலை, வார்டு-134க்குட்பட்ட சின்ன ராஜபிள்ளை தோட்டப் பகுதியில் உள்ள ரயில்வே குறுக்குப் பாலம், சுப்ரமணிய நகர் 2வது தெரு, பரங்குசபுரம் மற்றும் தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் வண்டல்கள் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்''.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.