தமிழகம்

இனி வாரத்தில் இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இனி வாரம் இரண்டு முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் கூறும்போது, “ தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி வாரத்திற்கு இரண்டு முறை கரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இனி வாரம் இரண்டு முறை (வியாழன், ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட 8 மெகா தடுப்பூசி முகாம்களில் 1.65 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், நான்கு நாட்களில் 3 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும் தடுப்பூசி முகாம்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வாரம்தோறும் திங்கட்கிழமை விடுப்பு வழங்கப்படும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 789 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,16,421. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,56,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,70,761.

SCROLL FOR NEXT