தமிழகம்

‘லிங்கா’ கதையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

செய்திப்பிரிவு

கதை திருட்டு தொடர்பான வழக்கில், ‘லிங்கா’ திரைப்படத்தின் முழுக்கதையையும் மார்ச் 14-ல் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் தான் எழுதிய முல்லைவனம் 999 படத்தின் கதையைத் திருடி, லிங்கா என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிட்டு மோசடி செய்ததால், கதை திருட்டில் ஈடுபட்ட லிங்கா படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய் துள்ளார்.

மேலும், கதை திருட்டு நடைபெற்றுள்ளதா என்பதை கண்டுபிடிக்க லிங்கா படத்தின் முழுக் கதையையும் தாக்கல் செய்ய லிங்கா படக்குழுவினருக்கு உத்தரவிடக்கோரி ரவிரத்தினம் துணை மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

இந்த மனு 4-வது நாளாக நீதிபதி விஸ்வநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது லிங்கா படக் குழுவினர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடும்போது, ‘லிங்கா’ படத்தின் கதையை இப்போதைக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. தேவைப்படும்போது தாக்கல் செய்வதாக தெரிவித்தனர்.

மனுதாரரின் வழக்கறிஞர்கள் ரமேஷ், கார்த்திகேயன் வாதிடும்போது, கதை திருட்டு நடைபெற்றதாகத்தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் உண்மையில் கதை திருட்டு நடைபெற்றுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு ‘லிங்கா’ படத்தின் முழுக்கதையையும் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் என்றனர்.

இதை ஏற்று, ‘லிங்கா’ படத்தின் முழுக் கதையையும் மார்ச் 14-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என லிங்கா படக்குழுவினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT