ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின்முக்கிய விசாரணை அதிகாரியான நல்லம்ம நாயுடு, வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 83.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்தவர் நல்லம்ம நாயுடு. எஸ்.பி.யாக இருந்த அவர் 2001-ல் காவல் துறை பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.
சென்னை பெரவள்ளூரில் மகன் வீட்டில் வசித்து வந்த அவருக்கு நேற்றுஅதிகாலை 3 மணி அளவில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. அவரது உடல் நேற்று மாலை சொந்தஊரான தேனி மாவட்டம் சுப்பு நாயக்கன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
நல்லம்ம நாயுடுவுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இளங்கோவன், சரவணன், செல்வி, கனிமொழி என 4 பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் இளங்கோவன் தொழில் துறை இணை இயக்குநராக உள்ளார்.
நல்லம்ம நாயுடுவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நேர்மைக்கு எடுத்துக்காட்டாக, எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், நியாயம், நீதியைநிலைநாட்டும் துணிச்சல்மிக்க அதிகாரியாகப் பணியாற்றியவர்” என்று தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.