தமிழகம்

தாம்பரம் அருகே மின் இணைப்பு கேட்க சென்ற விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து விரட்டப்பட்டதாக புகார்

செய்திப்பிரிவு

தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் கடந்த 10 நாட்களாக விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இது தொடர்பாக விவசாயிகள் அலுவலகம் சென்று முறையிட்டனர்.

அப்போது, அங்கு பணிபுரியும் குமரவேல் என்ற ஊழியர், விவசாயிகளை தரக்குறைவாகப் பேசி, அவர்களை அலுவலகத்தில் இருந்து விரட்டியடித்தாராம். இதனால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பதி கூறியதாவது: தொடர் மழை காரணமாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றதாலும், மின்கம்பி அறுந்து விழுந்ததாலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தற்போது மழை நீர் வடிந்து விட்டதால், மின் இணைப்பு வழங்கக் கோரி 2 நாட்களுக்கு முன்பு அதிகாரிகளிடம் முறையிட்டோம். அவர்கள் உடனடியாக இணைப்பு தருவதாக கூறினாலும், நேற்று காலை வரை இணைப்பு வழங்கவில்லை.

எனவே, மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேற்று சென்று, உதவி பொறியாளரை சந்திக்க முயன்றோம். உதவிப் பொறியாளர் இல்லாததால் போர்மேன் ராஜவேலுவை சந்தித்து, மின் இணைப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டோம்.

அவரும் இடத்தை ஆய்வு செய்து, பாதிப்பு இல்லை எனில் கண்டிப்பாக இணைப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அப்பொழுது அங்கிருந்த வயர்மேன் குமரவேல், தேவையற்ற வார்த்தைகளைப் பேசி, அலுவலகத்தை விட்டு வெளியேறும்படி மிரட்டினார். சக ஊழியர்கள் தடுத்தும், இலவச மின் இணைப்பு பெறும் விவசாயிகளுக்கு இவ்வளவு திமிரா என்று கூறி, எங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.

இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாடம்பாக்கம் உதவிப் பொறியாளர் வஜ்ரவேலுவிடம் கேட்டபோது, "இது தொடர்பாக விசாரணை செய்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளேன். மேலும், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது" என்றார்.

தாம்பரம் கோட்ட செயற் பொறியாளர் பாரிராஜன் கூறும்போது, "இந்தப் புகார் மீது விசாரணை நடத்தும்படி உதவிப் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT