ராஜீவ் கொலை வழக்கில் மதுரை சிறையிலுள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் கிடைத்ததையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் ஒருவரான தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகிலுள்ள சூரப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, தனக்கு உடல் நிலை பாதித்த நிலையில், மகன் அருகில் இருந்து கவனிக்கும் வகையில் அவருக்கு 30 நாள் பரோல் வழங்கவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.
இதற்கிடையே தனது மகனுக்கு பரோல் கேட்டு ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரியும் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக அரசு ரவிச்சந்திரனுக்கு நவ. 14-ம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கி ஆணை பிறப்பித்தது.
ஆனால், கன்னியாகுமரி மாவட்ட வெள்ள சேதப் பகுதிகளை நவ.15-ல் முதல்வர் பார்வையிட வந்ததால் அவரின் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் சென்றுவிட்டனர்.
இதனால், ரவிச்சந்திரனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இயலாத நிலை ஏற்பட்டதாக சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.